ரிஷப் பண்ட்டிற்கு சில போட்டிகள் ஓய்வு கொடுத்து வெளியில் அமர வையுங்கள், அப்போதுதான் அவருக்கு புரியும் என கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் மதன்லால்.
தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது இன்னிங்சில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி ரஹானே மற்றும் புஜாரா இருவரும் ஆட்டமிழந்த பிறகு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 240 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. மீதம் இரண்டு நாட்கள் இருந்ததால் தென் ஆப்பிரிக்க அணி நிதானத்துடன் விளையாடி வெற்றியையும் பெற்று விட்டது.
ரகானே மற்றும் புஜாரா இருவரும் ஆட்டமிழந்த பிறகு, சற்று நிதானத்துடன் விளையாடாமல் அடிக்க முயற்சிக்கிறேன் என்கிற பெயரில், 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். அதன் பிறகு நேரடியாக ஆல்ரவுண்டர்கள், பந்துவீச்சாளர்கள் விளையாட வந்ததால் தென் ஆப்பிரிக்க அணி எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டது.
ரிஷப் பண்ட் கடந்த 13 இன்னிங்ஸில் ஒரு அரைச்சதம் மட்டுமே அடித்திருக்கிறார். ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மைதானங்களில் நன்றாக விளையாடினார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் எல்லா நேரமும் தனது அதிரடி கைகொடுக்கும் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இது தற்போது அவருக்கு பாதகமாக அமைந்துள்ளது. இதனை குறிப்பிட்டுப் பேசிய இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மதன்லால்,
“ரிஷப் பண்ட் அவசரப்பட்டு விளையாடி வருகிறார். அவருக்கு சில போட்டிகள் ஓய்வு கொடுத்து வெளியில் அமரவைக்க வேண்டும். இந்த சமயத்தில், விருத்திமான் சஹா இருக்கிறார். அவரை பயன்படுத்த வேண்டும். ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு வெற்றியை பெற்ற தரக்கூடிய வீரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் தனிப்பட்ட ஆட்டம் விளையாடாமல், அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எங்கு அவசரம் காட்ட வேண்டும். எங்கு நிதானத்துடன் விளையாட வேண்டும் என இன்னும் புரியவில்லை என நினைக்கிறேன். அதனால் சில போட்டிகள் ஓய்வு கொடுத்து அவருக்கு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.” என அறிவுரை கூறினார்.