ஐபிஎல் முதல் பாதி வரை பென் ஸ்டோக்ஸ் பெரிதளவில் பௌலிங் செய்ய மாட்டார், அவரது உடல்நிலை பௌலிங் செய்யும் அளவிற்கு இல்லை என்று தகவல்கள் வந்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாக துவங்க இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.
தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என்றும் பேசப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் உணர்வுபூர்வமாக இருக்கின்றனர். கட்டாயம் இந்த வருடம் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.

மேலும் இந்த வருடம் கோப்பையை வென்றால் 5 கோப்பைகளுடன், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமன் செய்யலாம் என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த ஏலத்தில் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
தோனிக்கு இதுதான் கடைசி வருடம் என்றால், அடுத்ததாக கேப்டன் பொறுப்பில் பென் ஸ்டோக்ஸ் வருவார் என்ற பேச்சுக்களும் அடிபடுகின்றனர். ஆகையால் இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

தோனியைப் போல போட்டியை தனி ஆளாக நின்று வெற்றி பெற்றுக்கொடுக்க கூடிய அளவிற்கு திராணி உள்ளவர் பென் ஸ்டோக்ஸ் என்பதை பல போட்டிகளில் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்த வருடம் சற்று சிக்கலில் இருக்கிறார் என்ற தகவல்கள் வந்திருக்கிறது.
அவருக்கு கால் மூட்டுப்பகுதியில் பிரச்சனை இருப்பதால் முழுமையாக பந்துவீச முடியாது என்றும், ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் முழு பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார்; ஃபீல்டிங் செய்வதும் கடினம் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது. இரண்டாம் பாதிக்குள் குணமடைந்து விடுவார், அதன் பின்னரே ஆல்ரவுண்டர் போல செயல்பட முடியும் என்ற தகவல்களும் வந்திருக்கிறது.

பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் பங்களிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென்ஸ் ஸ்டோக்ஸ்-க்கு இப்படிப்பட்ட சிக்கல் வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை கொடுத்திருக்கிறது. குணமடைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.