இந்த வருட பிளே-ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்லவில்லை என்றால், தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் பட்சத்தில், மிகப்பெரிய அவமானமாக அமையும் என்று எச்சரிக்கை செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
2019ம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் பழைய முறைப்படி உள்ளூர் வெளியூர் மைதானங்களில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் ரசிகர்கள் குதூகலமாக இருக்கின்றனர்.
ஏற்கனவே சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கம் வந்தடைந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களின் பயிற்சியைக்கான ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு ஏராளமானவர் கண்டுகளித்தனர்.

41 வயதாகும் தோனி, 2008ஆம் ஆண்டிலிருந்து, இடையில் இரண்டு சீசன்கள் தவிர, இந்த வருடம் 14ஆவது சீசனாக சிஎஸ்கே அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார். கடந்த சீசன் ஜடேஜாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது அவர் சரியாக செயல்படாமல் பாதியிலேயே விட்டுச்சென்றதால், மீதமிருக்கும் போட்டிகளுக்கு தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார் தோனி
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட தோனி, சென்னையில் தான் எனது கடைசி ஐபிஎல் போட்டி இருக்கும். அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறினார். இந்த வருடம் அவர் ஓய்வு பெறுவார் என்கிற பேச்சுக்கள் அடிபடுகின்றன.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 13 சீசன்களில் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு சென்றது. அதில் ஒன்பது முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நான்கு முறை கோப்பையையும் வென்றிருக்கிறது. சிஎஸ்கே மிகவும் வெற்றிகரமான அணியாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் தோனிக்கு இந்த வருடம் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் பட்சத்தில், சிஎஸ்கே வீரர்கள் அவருக்காக அணியை பிளே-ஆப் சுற்றுக்கு எடுத்துச் செல்லவேண்டும் வேண்டும் என்று கூறியதோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறியதாவது:
“ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக இருந்து வரும் மகேந்திர சிங் தோனி, இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் பட்சத்தில், சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவேண்டும். சிஎஸ்கே அணிக்காக பல சாதனைகளை படைத்த அவருக்கு ஒரு கவுரவமாக அமையும். மேலும் சென்னையில் போட்டிகள் நடப்பதால் இன்னும் கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றது. இதனை தவறவிடக்கூடாது. இல்லையெனில், தோனிக்கு இது ஒரு அவப்பெயராகவும் சென்று முடியலாம் என்பதை வீரர்கள் மனதில் கொள்ள வேண்டும்.” என்று எச்சரிக்கையுடன் பேசினார்.
