ஐ.பி.எல் தொடரை வைத்து சூதாட்டம்; நான்கு பேரை கைது செய்தது காவல்த்துறை
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள சாடட்கஞ்ச் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் பணம், ஐந்து செல்போன்கள், டிவி, செட்-டாப் பாக்ஸ் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதே போல் ஆந்திர பிரதேசத்தின் குண்டூரிலும் ஐ.பி.எல் தொடரை வைத்து சூதாடிய 7 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து ஒரு கார், இரண்டு பைக், டி.வி, 13 செல்போன்கள், மூன்று ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் 2.97 லட்சம் ரொக்கத்தொகை ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.