5 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றி பெற்றுத்தந்த ரிங்கு சிங், அந்த சமயத்தில் தனக்கு இருந்த மனநிலையை பற்றி பகிர்ந்து கொண்டார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற லீக் போட்டியில், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷுப்மன் கில் 39(31) ரன்கள், சாய் சுதர்சன் 53(38) ரன்கள் அடித்துக்கொடுத்தனர்.
கடைசியில் வந்து வானவேடிக்கை காட்டிய விஜய் சங்கர் 63(24) ரன்கள் விளாசினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது குஜராத் அணி.

205 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு 2 விக்கெட்டுகள் போனபின், 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் 100 ரன்கள் சேர்த்தனர். நிதிஷ் ராணா 45(29) ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 83(40) அடித்து திருப்புமுனையை கொடுத்து அவுட்டாகினர்.
16 ஓவர்களில் 155 ரன்கள் அடித்திருந்தபோது, கடைசி நான்கு ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

17ஆவது ஓவரை ரஷித் கான் வீசி, முதல் மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல், சுன்னி நரேன், சர்துல் தாக்கூர் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார். இது குஜராத் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
155 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது. கடைசி 21 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் களத்தில் இருந்த ரிங்கு சிங் ருத்ரதாண்டவம் ஆடினார்.
கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. குஜராத் சார்பில் யாஷ் தயால் வீசினார். முதல் பந்தில் உமேஷ் யாதவ் சிங்கிள் எடுத்துக்கொடுக்க, அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை மொத்தமாக கொல்கத்தா பக்கம் திருப்பி வெற்றியையும் பெற்றுக்கொடுத்து மிரள வைத்தார் ரிங்கு சிங்.

கொல்கத்தா அணி 205 ரன்கள் இலக்கை கடந்து 207 ரன்கள் குவித்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ரிங்கு சிங் 21 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததால், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது ரிங்கு சிங் பேசியதாவது:

என்னால் அடிக்கமுடியும் என்று முழுமையாக நம்பினேன். கடந்த வருடம் லக்னோவிற்கு எதிராக கிட்டத்தட்ட எடுத்துச் சென்றேன். இப்போட்டியிலும் அதே நம்பிக்கையுடன் விளையாடினேன். இது அது என்று நான் எதையும் யோசிக்கவில்லை. நிதானமாகவே கடைசி பந்து வரை இருந்தேன். இதனால் ஒவ்வொரு பந்தையும் அடிக்க முடிந்தது. கடைசி ஷாட் மட்டும் அடிக்க கொஞ்சம் கடினமாக இருந்தது. இதுதான் கடைசி என்று முழு திறனை வெளிப்படுத்தினேன்.” என்று சாந்தமாக பேசினார்.