இங்கிலாந்து கவுண்டி அணியான ஹம்ப்ஷைர் அணிக்கு இந்த ஆண்டு சீசனின் நடுப்பகுதியில் இருந்து ஆடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே.
இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்குகின்றன. அதன் முதல் கட்டமாக ஜூலை மாதம் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மோதவிருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியில் பிசிசிஐ பல முன்னேற்ற ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு இளம் வீரர் ப்ரிதிவி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் மயங்க் அகர்வால் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து சென்று கவுன்டி போட்டிகளில் ஆடுவதற்கும் பிசிசிஐ நிர்வாகம் தற்பொழுது வீரர்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. அதில் ஒப்புதல் கேட்டு இருந்த இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானேவிற்கு தற்பொழுது பிசிசிஐ நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.
இவர் மட்டும் இல்லாமல் மேலும் சில வீரர்களும் இந்திய அணியிலிருந்து கவுண்டி போட்டிகளில் ஆடுவதற்கு இங்கிலாந்து செல்ல இருக்கின்றனர்.
அஜின்கியா ரஹானே இந்த ஆண்டு கவுண்டி சீசனில் ஹம்ப்ஷைர் அணிக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் தென்னாபிரிக்கா வீரர் ஐடென் மார்க்ரம் க்கு பதிலாக அணியில் இணைந்துள்ளார். ஹம்ப்ஷைர் அணியில் ஆடும் முதல் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆடி வரும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் நடைபெற இருக்கும் 8 கவுன்டி போட்டிகளில் அஜிங்கிய ரஹானே பங்கேற்பார் என ஹம்ப்ஷைர் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அஜிங்கிய ரஹானே, “பாரம்பரியமிக்க அணியில் ஆடும் முதல் இந்திய வீரர் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். நிச்சயம் அந்த அணிக்கு என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆடி வெற்றிகளையும் பெற்றுத் தர காத்திருக்கிறேன். எனக்கு அனுமதியளித்த பிசிசிஐ நிர்வாகத்திற்கு மிக்க நன்றி” என குறிப்பிட்டார்.