என்ன பார்த்தாலே உங்க ஜாம்பவான் நடுங்குவாரு; ஹர்பஜன் சிங் கெத்து பேச்சு
முன்னாள் ஜாம்பவானாக அறியப்படும் ரிக்கி பாண்டிங் தனது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஹர்பஜன் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், தனது நேர்த்தியான பந்துவீச்சு மூலமும், ஆக்ரோஷமான செயல்பாடுகள் மூலம் எதிரணி வீரர்களை கலங்கடித்தவர். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்களுக்கு எதிரான போட்டிகளில் ஹர்பஜன் சிங்கின் சண்டை இல்லாமல் இருக்காது என்றால் அது மிகையாகாது.

இந்திய அணியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓரங்கட்டப்பட்ட ஹர்பஜன் சிங், உள்ளூர் தொடர்களில் இன்று வரை சிறப்பாகவே விளையாடி வருகிறார். ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங்கிற்கு தமிழகத்திலும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்தநிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸிற்கு சமீபத்தில் ஹர்பஜன் சிங் அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவராக அறியப்படும் ரிக்கி பாண்டிங் தனது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து சொதப்பியதை நினைவு கூர்ந்து, பல்வேறு விசயங்களை ஓபனாக பேசியுள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது;
கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு ரிக்கி பாண்டிங் எனது பந்துவீச்சில் நிலைத்து நின்று ஆடியதே இல்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவரது எனது பந்தை கூட பார்க்க மாட்டார்,வெகு விரைவாகவே அவுட்டாகி விடுவார். அப்போதைய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங்கை எந்த பந்துவீச்சாளராலும் அவ்வளவு எளிதாக வெளியேற்ற முடியாது, ஆனால் அவர் எனது பந்தில் அதிகான முறை அவுட்டாகியுள்ளார்” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிக்கி பாண்டிங் விளையாடிய 5 இன்னிங்ஸிலும் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.