எழுந்து வா தங்கமே; சிறுவன் சுர்ஜித் குறித்து ஹர்பஜன் சிங் உருக்கம்
கடந்த 40 மணி நேரத்திற்கு மேலாக ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித் மீண்டு வரவேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்துவரும் நிலையில் ‘நீ வந்தா தான் உண்மையான தீபாவளி. என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் நடுக்காட்டுபட்டியில் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழ்துளை கிணறு இருக்கிறது. இந்த கிணற்றில் நேற்றுமுன்தினம் அவரது 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். 40 மணி நேரத்திற்கு மேலாக ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் போராட்டம் தொய்வின்றி நடந்து வருகின்றன.
100 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சுர்ஜித்தை பத்திரமாக மேலே கொண்டுவர தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். ராட்சத இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பள்ளம் தொடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தை நலமுடன் அவனது பெற்றோரிடம் சேர வேண்டுமென்று இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குழந்தை சுர்ஜித்திற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே #savesurjeeth pic.twitter.com/5jvUSjS9Eh
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2019
இதனிடையே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘சுர்ஜித் வந்தால் தான் எல்லோருக்கும் உண்மையான தீபாவளி’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், ‘நானும் ஒரு குழந்தையின் தகப்பன். அந்த வகையில் என்னால் சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்தை உயிர் பொழச்சு வரணும். உன் தாய் பாலில் வீரம் இருக்கு கண்ணு. நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தா தான் எல்லோருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே! வேதனையோடு ஒரு தீபாவளி’ என்று பதிவிட்டிருக்கிறார்