5 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்தான கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா
காயத்தில் இருந்து மீண்டு, கிட்டத்தட்ட இரண்டு மாத காலத்திற்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்துள்ள ஹர்திக் பாண்டியா, ரஞ்சி தொடரில் தனது முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், பந்து வீசும்போது சுருண்டு விழுந்த ஹர்திக் பாண்டியா முதுகில் காயம் காரணமாக சிகிச்சை எடுத்து மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.
தற்போது உள்ளூர் தொடரான ரஞ்சி கிர்க்கெட் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து குணமாகி விளையாடிய முதல் போட்டியிலேயே மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
மொத்தம் 18.5 ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியா 81 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
முன்னதாக காயத்திலிருந்து குணமாகியுள்ள ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பயிற்சியாக ரஞ்சி கோப்பை போட்டியில் ஹர்திக் விளையாடி வருகின்றார்.

ரீ எண்ட்ரீ குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது;
மீண்டும் பழைய படி பீல்டிங்கில் இறங்க வேண்டும். என்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு விரைவாக அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது தற்போதைய குறிக்கோள். நாட்டிற்காக மீண்டும் இந்திய அணியில் விரைவில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.
விளையாட்டு வீரனாக இருந்தாலும், இல்லை என்றாலும் உடற்தகுதி என்பது மிகவும் அவசியம். உடற்தகுதி ஒவ்வொருவரின் வாழ்க்கையை அழகாக வைத்து கொள்வதற்கும் மிகவும் அவசியம். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை போன்றது. இந்த பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.