ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் போசிஷன் சற்றும் சரியில்லை. மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்விக்கு வழிவகுக்கும் என பயங்கரமான கருத்தை முன் வைத்திருக்கிறார் ஏபி டி வில்லியர்ஸ்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் அகமதாபாத் மைதானத்தில் துவங்க உள்ளது. துவக்க போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கடந்த சீசனில் முதல் முறையாக இடம் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டதிலிருந்து, இறுதியில் அந்த அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது வரை பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு அமைந்தது. ஆகையால் இந்த வருடம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.
இந்த வருடம் குஜராத் அணிக்கு கூடுதல் சவால் என்னவாக இருக்குமெனில், மும்பை மற்றும் சென்னை போன்ற அணிகள் தங்களது சொந்த மைதானங்களில் போட்டிகளை விளையாடுகின்றனர். அவர்களது சொந்த மைதானங்களில் எவ்வளவு பலம் மிக்கவர்கள் என்பது பலருக்கும் தெரியும் என்பதால் பல சுவாரசியங்கள் இந்த வருடம் நிறைந்திருக்கப்போகிறது.

கடந்த சீசன் ஹார்திக் பாண்டியா செய்த அனைத்தும் எடுபட்டது. பேட்டிங்கில் நான்காவது இடத்தில் களமிறங்கினார். பந்துவீச்சில் முதல் ஓவரை வீசினார் ஆனால் இந்த வருடம் ஹர்திக் பாண்டியா தனது பேட்டிங் பொசிஷனை மாற்றிக்கொள்ள வேண்டும் அதுதான் பல போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஏபி டி வில்லியர்ஸ்.
“ஹர்திக் பாண்டியா நான்காவது வீரராக களம் இறங்குவது, சற்று மேலே இறங்குவது போல எனக்கு தோன்றுகிறது. அவர் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வதுதான் அணிக்கு சரியான பொசிஷனாக இருக்கும்.
ஏனெனில் இடது- வலது கை பேட்ஸ்மென்கள் களமிறங்குவது சாதகமாக இருக்கும். அந்த வகையில் டேவிட் மில்லர் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும், ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் களமிறங்க வேண்டும், ராகுல் திவாட்டியா ஆறாவது இடத்திலும், ரஷித் கான் ஏழாவது இடத்திலும் களம் இறங்கினால் மிகச் சரியாக இருக்கும். இல்லையெனில் அணியின் பேட்டிங் வரிசையில் சற்று குழப்பங்கள் நிகழ்வதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றது. இது அணியின் தோல்விக்கும் வழிவகுக்கலாம் என்பதை ஹர்திக் பாண்டியா புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.” என்று கருத்து தெரிவித்தார் டி வில்லியர்ஸ்.