உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறும் முடிவில் தான் இல்லை என தென்னாபிரிக்க அணியின் மூத்த வீரர் ஹசிம் அம்லா பேட்டியளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த உலக கோப்பை தொடர் மறக்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. மீதம் 3 போட்டிகள் இருக்கும் தருவாயில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த ஒரு அணியாக தென் ஆப்பிரிக்கா அணி இருக்கும் என எந்த ஒரு கிரிக்கெட் ரசிகரும் எதிர்பார்த்திருக்கமாட்டர்.

தொடரின் துவக்கத்தில் இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக சந்தித்த முதல் மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியது. இது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. நல்ல பார்மில் இருந்த டி காக் மிகவும் தடுமாறினார்.
அதேபோல் அணியில் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்ற இழுபறியில் இருந்த ஹசிம் அம்லா அனுபவ அடிப்படையில் உலக கோப்பை அணியில் இணைந்தார். அவரும் முதல் நான்கு போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தில் தலையில் அடிபட்ட பிறகு அடுத்தடுத்த போட்டிகள் சரியாக ஆட முடியவில்லை.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அரைசதம் கண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார் அம்லா. அதேபோல் உலக கோப்பை தொடரின் மூலம் ஒருநாள் அரங்கில் 8000 ரன்களை பூர்த்தி செய்தார். இது இரண்டாவது அதிவேக 8000 ரன்களாகும். இதற்கு முன்னர் விராத் கோலி முதலிடம் வகிக்கிறார்.
இந்நிலையில் உலகக் கோப்பைக்குப் பிறகு அமலாவின் பிளான் என்ன என பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது மறக்கக்கூடிய உலகக் கோப்பை தான். ஆனால் வீரர்கள் நன்றாக செயல்படவில்லை என நான் ஒருபோதும் கூற மாட்டேன். என் கண்ணெதிரே அவர்களின் பயிற்சியை நான் கண்டிருக்கிறேன். எனினும் இத்தொடரை மறப்பதற்காக நேராக என் குடும்பத்துடன் சென்று ஐக்கியமாகி விடுவேன். எனது கவலைகளை மறப்பதற்கான மருந்து என் குடும்பம் தான் என்றார்.

மேலும், நல்ல மனநிலையையும், உடல் அளவில் ஃபிட்டாகும் இருக்கிறேன். தொடர்ந்து ஆடுவேன் என்றார்.