உமேஷ் யாதவ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பாதியில் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் ஆரம்பித்த சில நேரத்திலேயே அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியாமல் போனது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவரால் இதன் காரணமாக விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது
தற்பொழுது நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் உமேஷ் யாதவ் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். தற்போது அவர் ஒரு சில விஷயங்களை இந்திய ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது தன்னால் மறக்க முடியாது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்திருந்தாலும், அதற்கு அடுத்த மூன்று போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதை இன்னும் தன்னால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.
முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றது, மூன்றாவது போட்டியை டிரா ஆக்கியது, வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் மிகப் பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றது என இந்திய வீரர்கள் மிக சிறப்பாக செயல் பட்டதை நான் கண்டு களித்தேன் என்று கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் என்னுடைய முழு வேகத்தை காண்பிப்பேன்
மேலும் பேசிய அவர் இந்தியா இரண்டு ஆண்டுகளாக மிக சிறப்பாக விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது. இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது முறையான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்கள். காயம் காரணமாக என்னால் நீண்ட நாட்களாக விளையாட முடியாமல் போனது.
தற்பொழுது மீண்டும் பழையபடி மிக சிறப்பாக பயிற்சி ஆட்டங்களில் பந்துவீசி வருவதாகவும், தன்னுடைய முழு வேகத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு காட்ட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்தி ரசிகர்கள் அனைவரும் இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி அல்லது முகமது சிராஜ் இவர்களில் மூன்று பேர் தான் விளையாடுவார்கள் என்று கூறி வருகின்றனர்.
இருப்பினும் உமேஷ் யாதவ் முந்தைய டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடியவர், டெஸ்ட் போட்டியில் நிறைய அனுபவம் இருக்கும் அவர் நிச்சயமாக விளையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருவது குறிப்பிடத்தக்கது