ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருப்பது மிகப் பெரிய உந்துதலாக இருக்கிறது என்று கேஎல் ராகுல் தனது சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு கடந்த 16ஆம் தேதி சென்றடைந்து, டெஸ்ட் தொடருக்கு முன்பாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வருகிற டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது.

இதுவரை இந்திய அணி 7 முறை தென்னாபிரிக்க மைதானத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. ஆறுமுறை தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் ஒருமுறைகூட தென்னாப்பிரிக்க மைதானத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைபற்றவில்லை. ஆகையால் இம்முறை இந்திய அணிக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டில் சென்று பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். வீரர்களுக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியை ராகுல் டிராவிட் கொடுத்து வருகிறார். பயிற்சியின்போது தனது அனுபவத்தையும் பேட்ஸ்மேன்களுக்கு பகிர்ந்து வருகிறார். இளம் வீரர்கள் சிலர் இருப்பதால் அவர்களுக்கு இத்தகைய அறிவுரைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ பதிவு பிசிசிஐ வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது ராகுல் ட்ரவிட் குறித்து கேஎல் ராகுல் பேசியிருக்கிறார்.
“ராகுல் டிராவிட் இந்த தருணத்தில் எங்களுடன் இருப்பது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்க மைதானங்களில் நிறைய அனுபவம் கொண்ட வெகுசில இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட் ஒருவர். அவர் எங்களுடன் பகிர்ந்துகொள்ள எண்ணற்ற அனுபவங்கள் இருக்கின்றன. ஒரு வார காலமாக நடைபெற்று வரும் பயிற்சியின்போது சிலவற்றை எங்களுக்கு பகிர்ந்து கொண்டு, பேட்டிங் டிப்ஸ் கொடுத்தார். அவர் தலைமையில் பயிற்சி செய்யும்போது இன்னும் பல அனுபவங்கள் நாங்கள் பெற்று வருகிறோம். எங்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக ராகுல் டிராவிட் இருக்கிறார்.” என்றார்.