ரசீத் கானின் பந்துவீச்சு டெஸ்ட் போட்டியில் எடுபடாததற்கு காரணம் என்ன..? முன்னாள் வீரர் விளக்கம்
ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளிய ரஷீத் கானின் பவுலிங், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எடுபடவில்லை.
டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் என ஜாம்பவான்களால் பாராட்டப்பெற்ற ரஷீத் கானை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி பெரிதும் நம்பியிருந்தது.
ஆனால் அந்த அணியின் நம்பிக்கைக்கு மாறாக, ரஷீத் கானின் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. ரஷீத் கான் ஓவரில் மட்டும் 154 ரன்களை குவித்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கான் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
ரஷீத் கானின் ஓவர்களை இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
ரஷீத் கானின் பவுலிங் டெஸ்ட் போட்டியில் எடுபடாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் ரன்களை விட்டுக்கொடுக்காமல், பந்துவீச வேண்டும். ஆனால் முதல் நாளிலேயே கடைசி நாட்களை போல அட்டாக் செய்து பந்துவீசினார் ரஷீத். முதல் நாளிலேயே ஆக்ரோஷமாக பந்துவீசினார். அதன் விளைவைத்தான் அவர் அறுவடை செய்தார்.
தொடக்கத்தில் அட்டாக் செய்து வீசிய ரஷீத், பின்னர் தான் டெஸ்ட் போட்டி குறித்து சற்று புரிந்துகொண்டு லெக் ஸ்பின்னை வீசினார். அவரது அதிகப்படியான செயல்பாடுகள் தான் அவரது பவுலிங் எடுபடாமல் போனதற்கு காரணம் என ஹைடன் தெரிவித்தார்.