வந்திருக்கும் புதிய இம்பேக்ட் பிளேயர் ரூல் அடிப்படையில், தோனி அடுத்த வருடமும் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆனந்த ஷாக் கொடுத்திருக்கிறார் டிவைன் பிராவோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் கோப்பையை வெல்லும் நிலையிலும் இருக்கிறது. முதல் அணியாக பைனலுக்குள் சென்றுவிட்டது.
புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து முதல் குவாலிபயர் போட்டியில் இதுவரை வீழ்த்திடாத குஜராத் அணியை எதிர்கொண்டது. பலரும் குஜராத் அணி வெற்றி பெற்றுவிடும் பைனலுக்குள் சென்றுவிடும் என்கிற கருத்துக்களை முன்வைத்தபோது அவை அனைத்தையும் பொய்யாக்கி சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 172 ரன்கள் அடித்தது. இந்த இலக்கைச் சேஸ் செய்த குஜராத் அணியை கட்டுப்படுத்தி விக்கெட்டுகள் வீழ்த்தி 157 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து இந்த வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
14 சீசனங்களில் பத்தாவது முறையாக ஐபிஎல் பைனலுக்குள் முன்னேறி புதிய வரலாறு படைத்திருக்கிறது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. “இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஐபிஎல் பைனல் முற்றிலும் மாறுபட்டது. எட்டு அணிகளுடன் விளையாடி பழக்கப்பட்டிருந்தோம். இந்த பைனல் இல்லை அப்படியல்ல. மிகவும் கடினமாக இருந்திருக்கிறது.” என்றார் மகேந்திர சிங் தோனி.
மேலும், இதுதான் உங்களது கடைசி ஐபிஎல் தொடரா? என்று கேட்கப்பட்டபோது, “ஐபிஎல் மினி ஏலம் வருவதற்கு இன்னும் 8-9 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் ஏன் இதைப்பற்றி பேசி தலைவலியை உண்டாக்க வேண்டும். பொறுமையாக முடிவெடுப்போம். நான் சிஎஸ்கே அணியில் பிளேயராகவோ அல்லது ஏதேனும் ஒரு வகையிலோ தொடர்ந்து இருப்பேன்.” என்றும் சூசகமாக பதில் கொடுத்தார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளருமான டிவைன் பிராவோ, தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். “கண்டிப்பாக தோனி விளையாடுவார். புதிதாக வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிப்படி, தோனி பேட்டிங் இறங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏற்கனவே அணியில் இருக்கும் சிவம் துபே, ரஹானே போன்றோர் மிடில் ஆர்டர் பேட்டிங்கை பார்த்துக்கொள்வர். தோனி கீப்பிங் மற்றும் தனது கேப்டன் திட்டத்தை செயல்படுத்தினால் போதுமானது. இந்த விதிப்படி இன்னும் ஓரிரு ஆண்டுகள் அவர் சிஎஸ்கே அணியுடன் பயணிப்பார் என்று கருதுகிறேன். நிச்சயம் பயணிப்பார்.” என பிராவோ கூறினார்.