டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளைப் போல டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி மீண்டும் பார்மிற்கு திரும்புவார் என்று பேட்டியளித்துள்ளார் கேஎல் ராகுல்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சரிவை சந்தித்து வந்த விராட் கோலி மீண்டும் தனது பார்மிற்கு திரும்பி வருகிறார். ஆசிய கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் விளாசி, டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த பார்மை டி20 உலக கோப்பை முழுவதும் தொடர்ந்தார். டி20 உலககோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் இவர் அதை முடித்தார். அதில் நான்கு அரைசதங்கள் அடங்கும்.
கிட்டத்தட்ட 40 மாதங்களுக்குப் பிறகு, நடந்து முடிந்த வங்கதேசம் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது 44 ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இது அவரது 72 ஆவது சர்வதேச சதம் ஆகும்.
இப்படியாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது பார்மிற்கு திரும்பிய விராட் கோலி, நிச்சயம் நடக்கவிருக்கும் வக்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரிலும் அதை நிரூபிப்பார் என்று பேசியுள்ளார் தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல்.
“பல வருடங்களாக இந்திய அணிக்கு விளையாடிவரும் அனுபவமிக்க முன்னணி வீரராக விராட் கோலி இருக்கிறார். அவரது மனநிலை மற்றும் விடாமுயற்சி பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்று தந்திருக்கிறது. சமீபகாலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் விளையாடவில்லை. ஆகையால் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் பார்மில் இல்லை என்று கூறிவிட முடியாது.
லிமிடெட் ஓவர் போட்டிகளை வைத்து நீங்கள் பேசுவதாக இருந்தால், அவர் மீண்டும் தனது பார்மிற்கு திரும்புகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடிப்பார், பார்மில் தான் இருக்கிறேன் என்று உங்களுக்கு மீண்டும் நிரூபிப்பார் என நம்புகிறேன். புதிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு அவர் செய்ததை மீண்டும் ஒருமுறை நிகழ்த்துவார்.” என்று பேட்டியளித்தார்.