சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யும் விதம் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று புகழாரம் சூட்டியதோடு மட்டுமல்லாமல் சில விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாடி வரும் ஒரு நாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தியா அணிக்கு ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இறுதி வரை நின்று போராடியவர் சஞ்சு சாம்சன். 63 பந்துகளில் 89 ரன்கள் அடித்து இருந்தார். இதில் ஒன்பது பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் அடங்கும்.
சமீபகாலமாக தொடர்ந்து டி20 அணியில் இடம் பிடித்து வந்தார் சஞ்சு சாம்சன். ஆனால் உலக கோப்பை டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதற்காக விமர்சனங்கள் மற்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கும், தற்போது இரண்டாம் கட்ட இந்திய அணிக்கும் விளையாடி வரும் சாம்சன் தன்னை நிரூபித்துக் காட்டிக் கொண்டே வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் இவருக்கு பல்வேறு மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சஞ்சு சாம்சன் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “சாம்சன் பாராட்டுதலுக்கு தகுதியானவர். அவருக்கு பல்வேறு மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீப காலமாக அடுத்த கட்டத்திற்கு ஆட்டத்தை நகர்த்தி அபாரமாக விளையாடுகிறார். தொடர்ச்சியாக பேட்டிங்கில் பங்களிப்பை கொடுத்து வரும் இவருக்கு, பேட்டிங் செய்யும்பொழுது கால்கள் போதிய அளவிற்கு நகர்வது இல்லை. ஆனாலும் அதை சமாளித்து நன்றாக பந்துகளை எதிர்கொள்கிறார்.
முதல் ஒருநாள் போட்டியில் ஆவேஷ் கானிடம் நான்கு ஐந்து பந்துகளை கொடுக்காமல் இவரெ அதை விளையாடி இருந்தால் இந்திய அணி நிச்சயம் மீதம் இருக்கும் ஒன்பது ரன்களையும் எடுத்திருக்கும். எளிதாக வெற்றி பெற்று இருக்கலாம். அந்த தவறை சாம்சன் செய்துவிட்டார்.” என கூறினார்.