உலகின் சிறந்த பந்துவீச்சாளர் இவர்தான் என இந்திய பந்து வீச்சாளரை புகழ்ந்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
டெஸ்ட், டி20 என இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றிய பிறகு, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி புனே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவான் மற்றும் கேப்டன் கோலி இருவரும் ஆரம்ப கட்டத்தில் நன்கு விளையாட இறுதிகட்டத்தில் கேஎல் ராகுல் மற்றும் அறிமுக வீரர் க்ருனால் பாண்டியா இருவரும் அதிரடியை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 317 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 98 ரன்கள் அடித்திருந்தார். கே எல் ராகுல், விராட் கோலி மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் அரைசதம் கண்டனர்.
மிகப்பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு அதிரடி துவக்க வீரர்களான ராய் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் தங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்களை வெறும் 14 ஓவர்களில் அடித்திருந்தது. ராய் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு ஒருவர்கூட நிலைத்து ஆட முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இங்கிலாந்து அணி தடுமாற்றம் கண்டது.
ஒருபுறம் இந்திய பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 6 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தனர். ஆனால் எதற்கும் அசராத புவனேஸ்வர் குமார் வெறும் 3 முதல் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்தார்.
இந்திய அணிக்கு புவியின் பந்துவீச்சு நம்பிக்கை அளித்தாலும், மறுபுறம் விக்கெட் எதுவும் விழாமல் அதிக ரன்கள் சென்று கொண்டிருக்கிறது என்ற அச்சமும் நிலவியது. அச்சமயம் தாக்கூர் அடுத்தடுத்து ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை இந்தியா வசம் திருப்பினார். இறுதியாக இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.
இந்திய வீரர்கள் பேட்டிங்கில் அசத்தினாலும் எவ்வித சமரசமும் இன்றி பந்துவீச்சில் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த புவனேஸ்வர் குமார் பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழ்ந்திருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில் “இன்றைய போட்டியில் மற்ற வீரர்கள் எப்படி தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு தரமாக இருந்தது. அவர் உலகின் திறன்மிக்க வெள்ளை பந்து பந்துவீச்சாளர்.” என புகழாரம் சூட்டியிருக்கிறார்.
முதல் ஒருநாள் போட்டியில் புவி 9 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மடுட்மே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Of all the skill on show today @BhuviOfficial has been the best … He has to be the most skilful white ball seam bowler in the world … #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) March 23, 2021