ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியில் இவரது இடமும் கேள்விக்குறியாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மார்கல் கருத்து தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 மாதங்களில் இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அது ஒருபுறமிருக்க, இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. ரஹானே மற்றும் புஜாரா இருவரும் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வருகின்றனர்.
கடந்தவருடம் ரஹானேவின் சராசரி சரியாக 20. அதேபோல் புஜாராவின் சராசரி 28 ஆகும். ஆகையால் இந்திய அணியில் இவர்களது இடம் கேள்விக்குறியாகி வருகிறது. இவர்கள் மட்டுமல்லாது, மிடில் ஆர்டரில் விளையாடி வரும் ரிஷப் பண்ட், கடைசியாக 13 இன்னிங்சில் ஒரு அரைச்சதம் மட்டுமே அடித்திருக்கிறார். 5 முறை ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணியுடன் நடந்த இரண்டாவது இன்னிங்சில், தென்ஆப்பிரிக்க வீரருடன் ஏற்பட்ட வார்த்தை மோதல்களால், ஆத்திரப்பட்டு அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் இந்திய அணியில் இவரது இடமும் கேள்விக்குறியாகி உள்ளது என்று தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மார்கல் கருத்து தெரிவித்துள்ளார்.
“சந்தேகமின்றி, ரிஷப் பண்ட் தரமான பேட்ஸ்மேன். ஸ்டம்ப் மைக் பின்னே நின்றுகொண்டு பேசுவதை விட, அவரது பேட் பேச வேண்டும். தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார். இதனை, இதற்கு முன்னரும் நான் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். பண்ட், இதை நன்கு உணர்ந்திருப்பார். அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்கிறோம், இந்திய அணியில் தனது இடம் கேள்விக்குறியாகும் என்று தெரிந்தும், இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் ஒருமுறை அதே தவறை செய்து ஆட்டம் இழந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் சற்று பொறுப்புடன் விளையாடிய பண்ட், இப்போது எதுவும் தெரியாதது போல் விளையாடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்றார்.