அர்ஷ்தீப் சிங் டெத் ஓவர்களில் எப்படி செயல்படுவார் என்பது பற்றி ஹர்திக் பாண்டியாவிற்கு தெரிந்தும் எதற்காக கடைசி ஓவர் கொடுத்தார் என்று விமர்சித்துள்ளார் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுமோசமாக பௌலிங் செய்ததால் தோல்வியடைந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக 19 ஓவர்கள் வரை நன்றாக சென்று கொண்டிருந்தது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அதில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து மொத்த ஆட்டத்தையும் நியூசிலாந்து பக்கம் திருப்பி விட்டுவிட்டார்.
இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சரியாக எடுபடவில்லை. அதுபோக அர்ஷ்திப் சிங் கடந்த சில போட்டிகளாக டெத் ஓவர்களில் மிகவும் மோசமாக பந்துவீசி வருகிறார். இப்படி இருக்க, எதன் அடிப்படையில் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங்கிற்கு ஹர்திக் பாண்டியா கொடுத்தார்? மேலும் அர்ஷ்தீப் சிங் என்னென்ன தவறுகள் கடைசி ஓவரில் செய்தார்? என்பது பற்றி கடுமையாக விமர்சித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர்.
“கிரிக்கெட் போட்டிகளில் ஆரம்ப காலத்திலேயே மிகவும் உச்சத்தை தொட்டவராக இருக்கிறார் அர்ஷ்தீப் சிங். ஒயிடு யார்கர் வீசுவதில் கைதேர்ந்த அர்ஷ்தீப் சிங், 20வது ஓவரில் அந்த பந்தை பயன்படுத்தவே இல்லை. பேட்ஸ்மேன் எளிதாக கணித்து அடிக்கும் அளவிற்கு அவரது பந்துவீச்சு இருந்தது.
டி20 போட்டிகளில் ஒவ்வொரு ஓவரும் உங்களுடைய முழு பங்களிப்பை கொடுக்க வேண்டும். முதல் சில ஓவர்களில் நல்ல துவக்கம் கிடைத்துவிட்டது என்பதற்காக, கடைசி ஓவரில் முனைப்போடு இல்லாமல் வீசியதாக தெரிந்தது.
வீரர்கள் அனைவரும் கடைசி பந்து வரை அந்த முனைப்பு காட்ட வேண்டும். இந்திய அணியிடம் அந்த முனைப்பு தெரியவில்லை. கடைசி சில ஓவர்கள் மிகவும் எளிதாக வீசி விட்டார்கள். அதுதான் இந்திய அணிக்கு தோல்வியை பெற்று தந்திருக்கிறது.
அர்ஷ்தீப் சிங் டெத் ஓவர்களில் எப்படி வந்து வீசுவார் என்பதை கடந்த சில தொடர்களில் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி இருக்க எதற்காக அவரிடம் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்ய கொடுத்தார். கடைசி ஓவர் எப்போதுமே வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே வீச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது போன்ற சுழல் பந்துவீச்சிற்கு எடுபடும் மைதானங்களில் ஸ்பின்னர்களை பயன்படுத்த வேண்டும் என்கிற முடிவை ஹர்திக் பாண்டியா யோசித்திருக்க வேண்டும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அவர் நகர வேண்டும்.” என்றார்.