என் பையன் கொஞம் விளையாட்டு பிள்ளை; வக்காலத்து வாங்கும் ஹர்திக் பாண்டியாவின் தந்தை
இந்திய பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா. 25 வயதான ஒரு இளம் வீரர் இவர். குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கார்களுக்கு பைனான்ஸ் வழங்கும் தொழில் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது குடும்பம் மிக மாடர்னான குடும்பம். எதையும் ஒளிவுமறைவின்றி வீட்டில் விவாதிக்கக் கூடிய சூழலில் தான் வளர்ந்ததாக ஹர்த்திக் பாண்டியாவே தனது நேர்காணல் ஒன்றில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்தான் சில தினங்கள் முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் இவரும் ராகுலும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு தொகுப்பாளர் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளிப்பது வாடிக்கை.
இதில் பிடித்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், இடங்கள், பாடல் என பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அதில் இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரா அல்லது விராட் கோலியா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இருவரும் சற்றும் யோசிக்காமல் கோலியின் பெயரை முன் மொழிந்தனர். மேலும் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சமூக வலைத்தளவாசிகள் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை விட கோலியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பிசிசிஐ பெண்கள் குறித்து தவறாக கருத்துகளை தெரிவித்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஹர்த்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா, அவரது மகன் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ‘மிட்டே’ ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் எனது மகனின் கருத்தை படிக்காமலே கருத்து கூறுவார்கள் என நான் நினைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. ஆகவே அந்தப் பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவன் பேசினான். ஆகவே அதை பெரியதாக எடுத்து கொள்ளக்கூடாது. எதிர்மறையாக எடுத்துக் கொண்டு தீவிரமாக விவாதிக்கக் கூடாது. என் மகன் ஒரு வெகுளியான பையன். அவன் இயல்பிலேயே விளையாட்டுத்தனமாகவே இருப்பான்” என்று கூறியுள்ளார்.