இலங்கை மற்றும் நியூசிலாந்து சீரிஸில் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார் வாசிம் ஜாபர்.
வங்கதேச தொடருக்கு பிறகு இந்திய அணி இலங்கை அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 போட்டிகள் வருகிற ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடக்க உள்ளது. ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை இந்த தொடர் நடக்கவிருக்கிறது.
புதிய தேர்வுக்குழு இன்னும் நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில், ஏற்கனவே இருந்த சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு இந்த தொடர்களுக்கும் அணியை தேர்வு செய்த பிறகு தங்களது பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வர் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
டி20 உலக கோப்பையில் இடம் மறுக்கப்பட்ட சஞ்சு சாம்சன்-க்கு இந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 தொடர்களில் நிச்சயம் இடம் கொடுக்கப்பட வேண்டும். அவரை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று தனது கருத்தை முன் வைத்திருக்கிறார் வாசிம் ஜாபர். ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது,
“இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என நம்புகிறேன். நீண்ட காலத்திற்கு அவர் கிரிக்கெட் விளையாட வேண்டும்.” என பதிவிட்டிருந்தார். மேலும் பேட்டியின்போது அவர் கூறியதாவது: சஞ்சு சாம்சன் சில உள்ளடி காரணங்களுக்காக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்குள் இருக்கும் அரசியலை தவிர்த்துவிட்டு முறையான வாய்ப்பை இவருக்கு கொடுக்க வேண்டும்.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை 16 டி20 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய இவர், 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
டி20 உலக கோப்பைக்கு பிறகு நடந்து முடிந்த நியூசிலாந்து அணி உடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஆறு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதிலும் நன்றாக விளையாடிய பின்பும் வெளியில் அமர்த்தப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.