ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்து வரும் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சரை முன்னாள் இந்திய வீரர் சேவாக், வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி அதில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தாலும், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை தனது மிரட்டல் பந்துவீச்சின் மூலம் கதி கலங்கை வைத்து வருகிறார்.
குறை சொல்லவே முடியாத அளவிற்கு அனைத்து போட்டிகளிலும் மாஸ் காட்டி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இதுவரை 11 இன்னிங்சில் மொத்தம் 41 ஓவர்களை வீசியுள்ளார். அதில் 130 பந்துகளில் பேட்ஸ்மேன்களை ரன் எதுவும் எடுக்க விடாமல் டாட் பால்களாக வீசியுள்ளார்.
டி.20 போட்டிகளில் ஓரிரு டாட் பால்கள் வைக்கவே பல பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், ஜோஃப்ரா ஆர்சரோ இந்த தொடரில் தான் வீசிய பந்துகளில் ஏறத்தாழ 50 சதவீத பந்துகளை டாப் பாலாக வைத்துள்ளார்.
இந்தநிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களான பாரிஸ்டோ மற்றும் வார்னரின் விக்கெட்டை அசால்டாக கைப்பற்றிய ஜோஃப்ரா ஆர்ச்சரை முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து சேவாக் பேசுகையில், “ ஜோஃப்ரா ஆர்சரின் பந்தை டேவிட் வார்னர் எதிர்கொண்ட விதம் எனக்கே ஏமாற்றம் கொடுத்தது. ராஜஸ்தான் அணியின் ஒரே அபாயகரமான பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தான், அப்படி இருக்கையில் அவரது ஓவரை டேவிட் வார்னர் கவனமாக எதிர்கொண்டிருக்க வேண்டும். ஜோஃப்ரா ஆர்ச்சர் மிக சிறப்பான வீரர். இந்த தொடரின் மதிப்பு வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தான். ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் சோதனையில் நான் தப்பித்தது எனக்கு மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்துள்ளார்.