இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு சூர்யகுமார் யாதவுக்கு கிடைத்தது. தன்னுடைய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அமர்க்கள படுத்தினார். மேலும் உள்ளூர் ஆட்டங்களில் அவர் மிக சிறப்பாக விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அவருடைய திறமைக்கு பரிசாக சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கிடைத்த இரண்டு வாய்ப்பையும் மிகச் சரியாக அவர் பயன்படுத்திக் கொண்டார். தற்போது அவர் இந்திய அணியில் எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் விளையாட தயார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் அசத்திய சூர்யகுமார் யாதவ்
டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் டாப் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். மூன்றாவது இடத்தில் அவர் டி20 போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் சற்று கீழே மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடினார். இருப்பினும் முதல் போட்டியில் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு துணை நின்றார். அதேபோல நேற்று நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 44 பந்துகளில் 53 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார்.
எந்த இடத்தில் இறக்கி விட்டாலும், அந்த இடத்தில் நான் விளையாட தயார்
இது சம்பந்தமாக பேசிய அவர், நான் இரண்டு வருடங்களுக்கு முன்பாக இப்படி விளையாடி இருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பேன். எனவே எந்த இடத்தில் என்னை இறக்கி விட்டாலும் அந்த இடத்தில் என்னுடைய முழு பங்களிப்பை நான் வழங்க தயார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்றும், அணிக்கு தேவைப்படும் நேரங்களில் கேப்டன் அனுமதியோடு பந்துவீசும் தயார் என்றும் சூர்யகுமார் யாதவ் தற்பொழுது கூறியுள்ளார்.

எனது தந்தை என்னிடம் அடிக்கடி சொல்வது பொறுமையாக இருக்க வேண்டும் என்பதுதான். நிச்சயமாக தமக்கான வாய்ப்பு ஒரு கட்டத்தில் நம்மை தேடி வரும் என்று அவர் அடிக்கடி என்னிடம் சொல்வார். அவரு சொன்ன அனைத்து விஷயங்களும் தற்போது படிப்படியாக எனது வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது உள்ள உலக சூழ்நிலை காரணமாக இந்த போட்டியை காண மைதானத்தில் எனது குடும்பம் இல்லை என்பதே எனக்கு சற்று வருத்தமாக இருக்கிறது.
இருப்பினும் நிலைமை சரியானதும் இந்திய அணிக்கு நான் விளையாடுவதை மைதானத்திற்கு வந்து எனது குடும்பம் கண்டு களிக்க நான் மிக ஆர்வமாக உள்ளேன் என்று கூறி முடித்தார்.