நாங்க நினைச்ச எதுவுமே நடக்கல… படுதோல்விக்கு இந்த இரண்டு பேர் தான் முக்கிய காரணம்; சஞ்சு சாம்சன் வேதனை !!

நாங்க நினைச்ச எதுவுமே நடக்கல… படுதோல்விக்கு இந்த இரண்டு பேர் தான் முக்கிய காரணம்; சஞ்சு சாம்சன் வேதனை

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும், இரண்டாவது குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஈசியான இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் கடுமையாக திணறியது. ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல் ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட 10 ரன்களை தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியுள்ளது.

இந்தநிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியை மாற்றிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளது ஏமாற்றமாக இருந்தாலும், எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன், பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பது உண்மை, ஆனால் பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். மிடில் ஓவர்களில் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாறிவிட்டோம், மிடில் ஓவர்களில் தான் போட்டியும் மாறியது. ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் நாங்கள் திணறியது போட்டியில் திருப்புமுனையையும் ஏற்படுத்திவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருக்கும் என்று கருதினோம், ஆனால் நாங்கள் நினைத்தது போன்று நடக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறுபட்டு இருந்தது, இதனால் ஹைதராபாத் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. கிடைத்த வாய்ப்பை ஹைதராபாத் வீரர்கள் மிக சரியாக பயன்படுத்தி கொண்டனர்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய சஞ்சு சாம்சன், “ஹைதராபாத் வீரர்களும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர், நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டோம். நாங்கள் இந்த ஒரு தொடரில் மட்டும் இல்லாமல் கடந்த மூன்று வருடங்களாகவே சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறோம். சில தலைசிறந்த இளம் வீரர்களை நாங்கள் கண்டெடுத்து அவர்களை சிறந்த முறையில் உருவாக்கி வருகிறோம். துருவ் ஜூரல், ரியான் பிராக் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணிக்கும் நல்ல விசயமாக நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.