நான் வைத்திருக்கும் 18ஆம் நம்பர், நான் வேண்டுமென்று கேட்டு வாங்கவில்லை, எனக்கு அமைந்தது இப்படித்தான் என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் விராட் கோலி.
சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்துவந்த விராட் கோலி, ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம். அந்த அளவிற்கு அவர் அணிந்து விளையாடும் 18ஆம் நம்பர் ஜெர்சியும் பிரபலமம்.

18 என்று தனி பிராண்ட் வைத்திருக்கும் அளவிற்கு பிரபலமாக இருக்கும் அந்த நம்பர் தன்னிடம் எப்படி வந்தது என்பது குறித்தும், அந்த நம்பருக்கு பின்னே ஒளிந்திருக்கும் ரகசியம் குறித்தும் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் விராட் கோலி. அவர் பேசியதாவது:
“நம்பர் 18ஐ நான் ஒன்றும் தேடிச்சென்று கேட்டு வாங்கவில்லை. எனக்கு பிடித்தமான நம்பரும் அதுவல்ல. அண்டர் 19 கிரிக்கெட்டில் நான் விளையாடியபோது 18 நம்பர் அணிந்து விளையாடினேன். அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆகஸ்ட் 18ஆம் தேதி அறிமுகமாகினேன். அப்போதும் எனக்கு 18ஆம் நம்பர் ஜெர்சி கிடைத்தது. துரதிஷ்டவசமாக எனது தந்தை இறந்த தேதியும் 18 ஆகும்.

முதலில் இந்த நம்பரை நான் பிடிக்காமல் அணிந்திருந்தாலும், பின்னர் எனக்கு மிகவும் நெருக்கமான நம்பராக இது மாறிவிட்டது. ஒவ்வொரு முறை இதை அணிந்து விளையாடும்பொழுதும் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். தற்போது என் வாழ்வில் இருந்து நீங்காத ஒரு நம்பராகவும் மாறிவிட்டது. அதற்கு ரசிகர்கள் இத்தனை பேர் கொடுத்த ஆதரவும் காரணம்.” என்றார்.
பின்னர் ஆர்சிபி குறித்து விராட் கோலி பேசியபோது, “இத்தனை வருடங்களாக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், இந்த அணியின் மீது அதீத நம்பிக்கை வைத்து பயணிக்கிறார்கள். மேலும் நாளுக்கு நாள் இந்த கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஆர்சிபி அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் வெற்றி தோல்வியை மனதில் வைத்திருந்தாலும் தங்களது ஈடுபாட்டை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் 100 சதவீதம் வெளிப்படுத்தி விளையாடுகிறார்கள். அதுவும் காரணம்.” என்றார் விராட் கோலி.
