உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை விட ஐபிஎல் போட்டிகள் இவர்களுக்கு முக்கியமானதாக தெரிகிறது. இவர்களா நமக்கு உலக கோப்பை பெற்று தருவார்கள்? என முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, கடும் விமர்சனத்தை இப்போது வரை சந்தித்து வருகிறது. ஏனெனில் பைனலை கவனத்தில் கொள்ளாமல் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, ஒரு வாரத்திற்கு முன்பு இங்கிலாந்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொண்டதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து ஒரே வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வந்துவிட்டது. ஐபிஎல் தொடருக்கு முன்பே பைனல் எப்போது நடைபெறுகிறது என்று தெரியும். ஆனால் பைனலுக்கென்று நேரம் ஒதுக்காமல் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களும் கவனம் செலுத்தினர்.
சர்வதேச போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகள் அவ்வளவு முக்கியமானதாக தெரிகிறதா? மேலும் இவர்கள் உலகக்கோப்பையை பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது? என சரமாரியாக சாடியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலியா அணியின் சிலர் கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி இங்கிலாந்து கண்டிஷனரை நன்றாக உணர்ந்து வைத்திருக்கின்றனர். ஆனால் இந்திய வீரர்களும் ஒரு போட்டி தானே என்று குறைவாக மதிப்பிட்டு போதிய பயிற்சிகள் இல்லாமல் இங்கிலாந்துக்கு சென்றனர். போட்டியை வென்று வரவேண்டும். கோப்பையை பெற்று வர வேண்டும் என்கிற முனைப்பு இந்திய அணி வீரர்கள் மத்தியில் துளியும் தெரியவில்லை.
பைனல் வரை வந்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியில் இருந்த நிறைய தவிர கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. அத்துடன் இரண்டு வருடத்திற்கான கடின உழைப்பையும் வீணடித்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரின் போது வீரர்கள் முடிவெடுக்க வேண்டுமா? அல்லது பிசிசிஐ தரப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு கவனம் செலுத்துங்கள் என்று வீரர்களுக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமா?. எதுவும் சரியாக நடக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவனம் செலுத்தாமல் லீக் போட்டிகளில் கவனம் செலுத்திவிட்டு அலட்சியமாக இருக்கும் இவர்களை எப்படி உலகக் கோப்பையை பெற்று வருவார்கள் என்று நம்புவது?. என்று விமர்சித்தார் ஆகாஷ் சோப்ரா.