ரிங்கு சிங் பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை தற்போது கிரிக்கெட் மைதானத்தில் அவர் விளையாடிய ஆட்டத்தை உலகமே கண்டு வியந்திருக்கும் என்று போட்டி முடிந்த பிறகு பேசி உள்ளார் நித்திஷ் ராணா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் கொல்கத்தா அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியிருந்தால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் குறுகிய வாய்ப்பு இருந்தது.
லக்னோ அணியும் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் களமிறங்கியது. முதல் பேட்டிங் செய்து 176 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பம் நன்றாக அமைந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சிறிதளவு தடுமாற்றம் கண்டது.
கடைசியில் வந்த ரிங்க்கு சிங் டெத் ஓவரில் மீண்டும் ஒருமுறை மிக சிறந்த பினிஷர் என்பதை காட்டிவிட்டார். துரதிஷ்டவசமாக இலக்கை எட்டுவதற்கு இரண்டு ரன்கள் கூடுதலாக அடிக்க முடியவில்லை. இதன் மூலம் ஒரு ரன்னில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. லக்னோ அணி பிளே-ஆப் இடத்தை உறுதி செய்தது.
போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நித்திஷ் ராணா பேசுகையில், “இன்று நம்பிக்கையுடன் களம் இறங்கினோம். இறுதியில் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையாதது வருத்தத்தை கொடுக்கிறது. இந்த சீசன் முழுவதும் நாங்கள் விளையாடிய விதத்தில் இருந்து நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம். அதேபோல் நிறைய தவறுகள் செய்ததை அடுத்த சீசனில் வருவதற்குள் சரிசெய்துகொள்வோம். இந்த சீசனில் இருந்து நிறைய படிப்பினைகள் கிடைத்திருக்கின்றன. இவை அனைத்தையும் வைத்து இன்னும் பலமிக்க அணியாக கம்பேக் கொடுப்போம்.
ரிங்கு சிங் பற்றி இனிமேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. நாங்கள் விளையாடிய 14 போட்டிகளில், அனைத்திலும் நான் ரிங்கு சிங் பற்றி பேசியதாகவே உணர்கிறேன். இன்று அவர் ஆடிய ஆட்டத்தை உலகமே கண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவரது வளர்ச்சியை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமிதமாகவும் உணர்கிறேன்.” என்று நெகிழ்வுடன் பேசினார் நிதிஷ் ராணா.