நான் அப்படி எதுவும் நினைக்கல; விராட் கோஹ்லி ஓபன் டாக்
உலகக்கோப்பை வரவுள்ளதால், ஐபிஎல் தொடரில் உடல்தகுதி பாதிக்காத வகையில் விளையாடுவோம் என இந்தியக் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா தோற்றுள்ளது. உலகக் கோப்பை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவிற்கு இந்த தோல்வி சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கமளித்திருந்த விராட் கோலி, தாங்கள் தொடர்ந்து விளையாடி வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பொருள், ஓய்வில்லாமல் விளையாடுவதால் சற்று களைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதாகும். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இரண்டு மாதம் இந்திய வீரரக்ள் விளையாடிவிட்டு, அதன்பின்னர் உலகக்கோப்பையிலும் விளையாடினால், அவர்கள் உடல்தகுதி என்னவாகும், உலகக் கோப்பை என்னவாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள விராட் கோலி, “தோல்வி குறித்து நம் அணி வீரர்கள் எந்த வித பதட்டத்திலும் இல்லை. ஏனென்றால் கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் இனி என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். உண்மையில் கூற வேண்டுமென்றால், இந்த தோல்வியால் ஒன்றும் ஆகிவிடவில்லை. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டையே விளையாடியுள்ளோம். ஆனால் ஆஸ்திரேலியா அதிக புத்துணர்ச்சியுடனும், நேர்த்தியுடனும் விளையாடியுள்ளனர். எனவே இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இடம்பெறுவார். அவர் வந்தால் பேட்டிங்க் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலம் கூடும்.
உலகக் கோப்பையில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி எங்கள் எண்ணத்தில் தெளிவாக உள்ளது. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் நெருக்கடியாக நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் மேம்படுத்தவுள்ளோம். அதை அறிந்துகொள்ளவே இந்த தொடரை விளையாடினோம். புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் போது, நெருக்கடியான நேரத்தில் அவர்கள் பொறுப்பேற்று விளையாடுவார்கள் என எண்ணினோம். ஆனால் நாம் நினைத்தது அனைத்து நேரங்களிலும் நடப்பதில்லை. இருப்பினும் இந்த சோதனையால் தான் நாம் அணியின் நிலவரத்தை அறிந்து கொள்ள முடிந்தது” என்றார்.
ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாடுவோம் என்று என்னால் நிச்சயமாக கூற முடியாது. உலகக்கோப்பையே முக்கியம். அதேசமயம் ஐபிஎல் போட்டியை ரசிக்கும் வண்ணம் உடல் களைப்பு ஆகாமல் மேலோட்டமாக விளையாடுவோம். நமது வீரர்கள் அனைவருக்குமே உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எனவே அவர்கள் பொறுப்புடன் ஐபிஎல் போட்டிகளை விளையாடுவார்கள் என நம்புகிறேன். யாரும் அதிக சிரமப்பட்டு ஐபிஎல் விளையாடி உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்காமல் போவார்கள் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் உலகக்கோப்பை என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது என்றும், ஐபிஎல் என்பது வருடந்தோறும் வருவது என்பதையும் நமது வீரர்கள் நன்கு அறிவார்கள்” எனவும் கூறினார்.