விராட் கோலிக்கு பந்துவீசியே ஆகவேண்டும் என மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவன்னே ஆலிவர்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவஙகுகிறது. மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை விராட் கோலி வழிநடத்துகிறார். இது அவருக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடராக பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட முறையிலும் கேப்டன் பொறுப்பில் அவர் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஆலிவர், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2019ஆம் ஆண்டு கடைசியாக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் விளையாடினார். அதன்பிறகு தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த தொடர் தனக்கு எவ்வளவு முக்கியமானது மற்றும் விராட் கோலியை எதிர்கொள்வது குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். மிகவும் சவால் நிறைந்ததாக இது இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசப்போகிறேன் என்ற ஆர்வம் மட்டுமே என்னிடம் இருக்கிறது. குறிப்பாக விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் அவருக்கென சில திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. விராட் கோலிக்கு பந்து வீசுவதற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.

இத்தொடரில் அவரது விக்கெட் வீழ்த்துவதே எனது முதல் இலக்காக இருக்கும். மேலும் அணியின் வெற்றிக்கு நிறைய பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பயன்படுத்தி நிரந்தர இடம் பிடிப்பதற்கு முயற்சி செய்வன்.” என்றார்.