பேட்டிங்கில் பிக் ஹிட்டிங் ஆடுவதை இவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என்று பேசியுள்ளார் சர்துல் தாக்கூர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 89 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அந்த சமயத்தில் உள்ளே வந்து நிறுத்தாமல் 6 மற்றும் 4 என்று அடித்து பெங்களூர் பெங்களூர் பவுலர்களை கதிகலங்க வைத்தார் சர்துல் தாக்கூர்.

இவரின் இந்த அதிரடியான ஆட்டத்தால் கடைசி எட்டு ஓவர்களில் 110 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா அணி. இறுதியில் 29 பந்துகளுக்கு 68 ரன்கள் அடித்து புதிய வரலாறு படைத்த கையோடு ஆட்டம் இழந்தார். இன்னிங்ஸ் முடிவில் கொல்கத்தா அணி 204 ரன்கள் அடித்தது.
அதன்பிறகு கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு ஆர்சிபி அணியை 123 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்து, 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றனர்.

பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி கலக்கிய சர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருதை பெற்றபோது பல்வேறு கேள்விகள் இவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது, இப்படி அதிரடியாக பிக் ஹிட்டிங் விளையாடுவதற்கு யார் உங்களுடைய இன்ஸ்பிரேஷன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய சர்துல் தாக்கூர் “பிக் ஹிட்டிங் என்றாலே அது சேவாக் தான். அவர்தான் எங்களுக்கு குரு. அவரைவிட யாரால் வேகப்பந்து வீச்சாளர்களை அப்படி அடிக்கமுடியும். அவரைப் பார்த்து தான் இத்தனை வருடங்களாக பிக் ஹிட்டிங் ஆடவேண்டும் என்று கனவுகளோடு விளையாடி வருகிறோம்.” என்றார்.

போட்டியில் ஏழாவது வீரராக களமிறங்கி வெறும் 29 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய சர்துல் தாக்கூர், ஐபிஎல் வரலாற்றில் சாதனை பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார். ஏழாவது மற்றும் அதற்கு கீழ் வரிசையில் பேட்டிங் இறங்கி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
முதல் இடத்தில், இவரது அணியைச் சேர்ந்த ஆண்ட்ரே ரசல் இருக்கிறார். 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஏழாவது வீரராக களமிறங்கி 88 ரன்கள் அடித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது சர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணியில் இருந்தார். இவரது ஓவரிலும் ரசல் வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.