மூன்றாவது டி20 போட்டியின் போது ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்ட விராட் கோலி, அதற்காக தான் என்ன செய்தார் என்பதை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 187 ரன்கள் சேஸ் செய்தது. சூரியகுமார் யாதவ் 69 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்தில் சிக்ஸ் அடித்து இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார். இறுதியாக, இந்திய அணி 19.5 அவர்களின் 187 ரன்கள் இலக்கை கடந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவை மிகச் சிறந்த பவுலர் என்று குறிப்பிட்டார்.
“ஜாம்பா என்னை விக்கெட் எடுக்க என்ன டெக்னிக் வைத்திருக்கிறார் என்று எனக்கு தெரியும். ஆகையால் அவரது பந்துவீச்சிற்கு ஏற்றாற்போல நான் விளையாடினேன். இரண்டாவது போட்டியில் பவுண்டரி அடித்த பிறகு அடுத்த பந்தில் நான் சிக்ஸர் அடித்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு ரன்கள் அடிக்க முயற்சித்து அவுட் ஆனேன். ஸ்டம்பை நோக்கி பந்துவீசுவது அவரது டெக்னிக்காக இருந்தது. ஆகையால் இடது ஸ்டெம்பில் இருந்து சிறிது தூரம் விலகி நின்று அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பயிற்சி செய்தேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.” என்றார்.
மூன்றாவது போட்டியில் ஜாம்பாவின் 8 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, 16 ரன்கள் அடித்திருந்தார். அதைப் பற்றி பேசிய அவர், “ஜாம்பா மிகச்சிறந்த பவுலர் அவரை எல்லா பந்துகளிலும் அடிக்க நினைத்தால் தவறுதலாக முடிந்துவிடும். ஆகையால் சில பந்துகளில் ஒரு ரன்கள் அல்லது இரண்டு ரன்கள் எடுத்துவிட்டு கிடைக்கும் வாய்ப்புகளில் பவுண்டரி அடித்தேன். ஆஸ்திரேலியா மைதானத்தில் ஜாம்பாவை எதிர்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என குறிப்பிட்டார்.
கடைசி ஓவர் ஆட்டம் இழந்தது பற்றி பேசிய அவர், “நாங்கள் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கையில் கடைசி ஓவரில் மூன்று அல்லது நான்கு ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்திருக்க வேண்டும். நடுவில் சில விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் ஸ்லோ ஆனது. ஆகையால் 11 ரன்கள் வரை சென்று விட்டது. முதல் பந்தலையே சிக்சர் அடித்தது சற்று அழுத்தத்தை குறைத்து இருக்கிறது.” என்றார்.