பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் பேட்டிங் குறித்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
பாகிஸ்தான் அணிக்கு முன்னணி பேட்ஸ்மேன் மட்டுமல்லாது லிமிடெட் ஒரு போட்டிகளின் கேப்டனாக திகழ்ந்து வருபவர் பாபர் அசாம். இளம் வயதிலேயே தனது பேட்டிங் திறமை மூலம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார். உதாரணமாக இவரது பேட்டிங் திறமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.
இவர் டி20 போட்டிகளில் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அதேநேரம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் நீடித்து வருகிறார். சொல்லப்போனால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை இவரை நம்பித்தான் இருக்கிறது என்றால் மிகையாகாது.
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் மூன்று போட்டிகளில் 195 ரன்கள் அடித்தார். அதேபோல் 3 டி20 போட்டிகளில் 77 ரன்கள் அடித்திருந்தார். சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இவர் ஒருவரே ஆடினார்.

இந்நிலையில் இவரது பேட்டிங் திறமை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில்,
“பாபர் அசாம் பேட்டிங் திறமை அசாத்தியமானது. அவர் விளையாடுவதை நான் விரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறேன். இவருக்கு பந்து வீசுவதை விட இவரது பேட்டிங்கை வேடிக்கை பார்ப்பதற்கு நான் அதிகம் விரும்புகிறேன். வேகப்பந்து வீச்சாளர்களை தனது பேட்டிங் மூலம் மிக மெதுவாக பந்து வீசுகிறார்களோ என யோசிக்கும் அளவிற்கு அசாத்தியமாக எதிர்கொள்கிறார்.
ஆனால் என்னைப்போல மிதமான வேகத்தில் வீசும் பவுலர்களுக்கு இவர் சற்று அச்சுறுத்தலாகவே இருப்பார். நான் முன்பைவிட சமீப காலங்களில் மெதுவாகவே பந்து வீசுகிறேன். அதை நான் நன்கு அறிவேன். ஆதலால் அவருக்கு பந்துவீச யோசிக்கிறேன்.” என புகழாரம் சூட்டியிருக்கிறார்.