அந்த ஆஸ்திரேலிய வீரர்கள் போலவே நானும் விளையாடினேன். அது எனக்கு சிறப்பாக அமைந்தது என பேட்டியளித்துள்ளார் ஆட்டநாயகன் யுசுவேந்திர சஹல்.
ஒருநாள் தொடர் முடிவுற்ற பிறகு, இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் கன்பரா மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் இந்திய அணி துவக்க வீரர்களாக தவான் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
இதில் தவான் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க கேஎல் ராகுல் நிலைத்து ஆடி வந்தார். அவருக்கு அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி, மணிஷ் பாண்டே இருவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன் 23 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஸ்டவசமாக ஹென்றிகுவஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
மறுமுனையில் நிலைத்து ஆடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கீழ் வரிசையில் இறங்கி சிறப்பாக ஆடிய ஜடேஜா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.
பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜா தலையில் அடிக்க, ஜடேஜா ஆட்டத்தின் இரண்டாவது பாதியை அவர் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக ஐசிசி விதிமுறைப்படி சஹல் உள்ளே எடுத்து வரப்பட்டார். சஹல் 4 ஓவர்கள் முழுமையாக பந்துவீசி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மைதானத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்படுத்தினாலும், சஹல் உள்ளே எடுத்து வரப்பட்டது இந்திய அணிக்கு மிகவும் சாதகமாகவே அமைந்தது. அவர் பின்ச், ஸ்மித் என இரண்டு முக்கிய வீரர்கள் விக்கெட் என மொத்தம் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கடைசியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முக்கியமான கட்டத்தில் உள்ளே வந்து 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “எனக்கு கடைசி பத்து நிமிடத்தில் தான் நான் விளையாடப் போகிறேன் என தகவல் வந்தது. எதற்கும் நான் தயங்கவில்லை. 10 – 15 போட்டிகளில் நான் விளையாடி நல்ல அனுபவத்தில் இருந்ததால் உடனடியாக ஆட வைத்தது எந்தவித பதட்டமும் தரவில்லை. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் சாம்பா நன்றாக பந்துவீசினார். அதை கவனித்த நான் அவரைப் போலவே பந்துவீச முற்பட்டேன். அது எனக்கு நல்ல பலனை கொடுத்தது. 150-160 ரன்கள் நல்ல ஸ்கோர். இதனை எளிதாக கட்டுப்படுத்த முடியும். திட்டமிட்டபடி செயல்பட்டோம். பலன் கிடைத்துவிட்டது.” என பேட்டியளித்தார்.