கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. – கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு!
விராத் கோலியை கண்டால் எனக்கு சற்றும் பயமில்லை என பேசியுள்ளார் பாகிஸ்தானின் 17 வயது வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் இளம்வீரர் நசீம் ஷா, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமானார். 17 வயதான இவர் மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஒன்பதாவது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இளம் வயதில் 5 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் டெஸ்ட் அரங்கில் இளம் வயதில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.
இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக ஆடுவது குறித்து பேசிய அவர், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி குறித்தும் பேசினார். அவர் கூறுகையில்,
“பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்பது எப்போதும் அனைவருக்கும் ஸ்பெஷல் தான். அதேநேரம் இரு அணிகள் மோதல் என்பது மிக அபூர்வமாக மாறியுள்ளது. இருப்பினும் இந்திய அணிக்கு எதிராக விளையாட தயாராக உள்ளேன். அந்த நாட்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்வேன் என நம்புகிறேன்.” என்றார்.
கோஹ்லி குறித்து பேசிய அவர், “கோஹ்லியை பொறுத்தவரையில் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அவரைப் பார்த்து எனக்கு சற்றும் பயமில்லை. சிறப்பான வீரர்களுக்கு எதிரான பந்து வீசுவது என்பது எப்போதும் சவாலானது. ஆனால் அங்கு நீங்கள் இயல்பானதை விட அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். கோஹ்லி மற்றும் இந்திய அணிக்கு எதிராக விளையாட தயாராக உள்ளேன்.” என்றார்.