அரையிறுதியில் பும்ராவை எப்படி சமாளிப்பது என நினைத்து முந்தைய நாள் நான் தூங்கவே இல்லை என இறுதிப்போட்டிக்கு முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது. இப்போட்டியில் ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்த போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின்போது பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த ராஸ் டெய்லர் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியது குறித்து கூறுகையில்,

‘ஒருநாள் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது டெஸ்ட் போட்டியில் விளையாடும் உணர்வை ஏற்படுத்தியது. வில்லியம்ஸன் அவுட் ஆன பிறகு, ஒரு சவாலான எண்ணிக்கையை எட்ட வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. 260 ரன்களை எடுத்துவிட்டால், அது சவாலான இலக்காக இருக்கும் என்று வில்லியம்ஸன் என்னிடம் வற்புறுத்தியிருந்தார். மேலும், இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை விக்கெட் எடுத்துவிட்டால் ஆட்டத்தை நம் பக்கம் கொண்டுவந்து விடலாம் என்பதில் கவனமாக இருந்தோம்.
பும்ராஹ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டெய்லர், அருமையான டெத் ஓவர்களை வீசுவதில் உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் தற்போது வரை இல்லை.
அதிகாலை 3 மணிக்கே எழுந்து அதுபற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன். அவரை நாங்கள் சரியாக ஆடவில்லை. மிகவும் தடுமாறினோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனாலும், நாங்கள் நினைத்ததை சாதிக்க முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறோம்’ என்றார்.