டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
இந்திய அணியில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் அசைக்க முடியாத வீரராக இருந்துவரும் ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்திருக்கிறார். டி20 போட்டிகளிலும் நான்கு முறை சதம் விளாசி சாதனை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில வருடங்களாக ஆடிவரும் ரோகித் சர்மா நடு வரிசையிலேயே தொடர்ந்து இறக்கப்பட்டு வந்தார். ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவரால் சதம் அடிக்க முடிந்தது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் துவக்க வீரராக களமிறங்குவது குறித்து தொடர்ந்து விவாதம் நடந்தது. போட்டி துவங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விராட் கோலி இப்போட்டியில் ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறங்குவார் என தெரிவித்தார்.
அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதமடித்தார். இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ரோகித் சர்மா தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி 150 ரன்களை கடந்தார். 200 ரன்களை நிச்சயம் விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக, 176 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் 23 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கும் அனுபவம் எப்படி இருக்கிறது? என நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது, “லிமிடெட் ஓவர் போட்டிகளில் போல அல்லாமல், டெஸ்ட் போட்டியில் துவங்குவது மிகவும் வித்தியாசமானது. திடமான மனநிலை வேண்டும். லிமிடெட் ஓர்களில் துவக்க வீரர் சொதப்பினால் பின்னர் வரும் வீரர்கள் அதை சரிசெய்து கொள்ளலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.”

“இதற்காக நான் இரண்டு வருடங்களாக காத்திருக்கிறேன். அதற்க்கு என்னை தயார் படுத்தி வந்தேன். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவங்குவேன் என எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. இந்த தொடரில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். மனநிலையில் எந்த குழப்பமும் இல்லை. அதனால் நல்ல ரன் குவிப்பில் ஈடுபட முடிந்தது” என்றார்