ஆஸ்திரேலிய அணிக்கே நான் தான் பலவீனம்; ஆரோன் பின்ச் வேதனை
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பலவீனமான வீரர் தானே என்று கேப்டன் ஏரோன் பிஞ்ச் மனக்கசப்புடன் கூறியுள்ளார்.
3 இன்னிங்ஸ்களில் 26 ரன்களையே அவரால் எடுக்க முடிந்தது, 3 இன்னிங்ஸ்களிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் ‘செல்லப்பிள்ளையாக’ ஆட்டமிழந்து சென்றார்.

டெஸ்ட் போட்டிகளின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அவரை ‘ஒர்க் அவுட்’ செய்து காலி செய்தனர். மொத்தத்தில் ஒரு துர்சொப்பன தொடராக பிஞ்ச்சுக்கு அமைந்தது.
இந்நிலையில் ஆஸி. ஊடகம் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:
“வீட்டுக்குத் திரும்பி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிடுவது பிடித்திருக்கிறது. மிகுந்த ஏமாற்றமான ஒரு தொடர். நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று, எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அதன் பக்கத்தில் கூட வர முடியவில்லை.

அணியின் பலவீனமானவனே நான் தான். ஒரு கேப்டனாக இது எனக்கு மன உளைச்சலைக் கொடுக்கிறது.
இந்த இடைவெளி என் பேட்டிங் உத்தியை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும், உலகக்கோப்பைக்குள் நான் இழந்ததை மீண்டும் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். என்னுடைய நம்பிக்கை தளரவில்லை. என்னால் மீண்டும் பழைய அதிரடிக்குத் திரும்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது, மீதியக் காலம்தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு கூறினார் ஏரோன் பிஞ்ச்.
ஆஸ்திரேலிய தொடர் குறித்து மைக்கெல் கிளார்க் பேசியதாவது;
எம்.எஸ் (தோனி)-க்கு எந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெரியும். 300 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் ஆடியுள்ளார், ஆகவே அவருக்குத் தெரியும்.

இலக்கு பெரியதாக இருந்தால் அவர் நிச்சயம் வேறு மாதிரி ஆடியிருப்பார், 230 என்பதால் இப்படி ஆடி வெற்றியை உறுதி செய்தார். இலக்கு பெரிதாக இருக்கும் போது வேறு வகையில் திட்டமிட்டு ஆடியிருப்பார்.
2வது போட்டியில் அடிலெய்டில் அவரது அணுகுமுறையைக் கவனியுங்கள், 3வது மெல்போர்ன் போட்டியிலும் கவனியுங்கள், இரண்டும் வேறு அணுகுமுறைகளே.
4,5, 6 என்று அல்ல எந்த நிலையிலும் தோனியைக் களமிறக்கலாம். விராட் அவரை சரியாகப் பயன்படுத்துவார் என்றே நான் கருதுகிறேன்.