வரும் ஓவல் டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார், இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான அலிஸ்டர் குக்.
அலட்டல் இல்லாத அமைதியான சாதனையாளர் அலிஸ்டர் குக் ஓய்வு அறிவித்தார்
நிறைய யோசித்து கடந்த சில மாதங்களாக மனதில் வைத்திருந்த ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளேன். இது துயரமான நாள் என்றாலும் என் முகத்தில் பெரிய புன்னகையுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். நான் அனைத்தையும் அளித்து விட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை.
நான் கற்பனை செய்ததற்கு மேலாகவே பங்களிப்புச் செய்து விட்டேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிலபல கிரேட்களுடன் ஆடியதுதான் என் இனிய அனுபவம், நான் செய்த அதிர்ஷ்டம். இனி ஓய்வறையை எனக்குப் பிடித்த இங்கிலாந்து அணியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சரியான நேரத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

சிறுவயதில் தோட்டத்தில் கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியது முதல் இந்த ஆட்டத்தை பெரிதும் நேசித்து வருகிறேன். இங்கிலாந்து சீருடையை அணிந்ததை ஒருக்காலும் நான் குறைவாக எண்ண முடியாது. எனவே இளம் வீரர்களுக்கு வழிவிட இதுவே சிறந்த தருணம்.
தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு நன்றி நவில வேண்டும். ஆனால் பார்மி ஆர்மிக்கு சிறப்பு நன்றிகள். இங்கிலாந்து அணி எங்கு சென்றாலும் பார்மி ஆர்மி எங்களுக்கு அளித்த உத்வேகம் மறக்க முடியாதது. அதே போல் சிறப்பாக நன்றி தெரிவிக்க வேண்டுமெனில் அது கிரகாம் கூச்சிற்குத்தான். 7 வயது சிறுவனாக எசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் வாசலில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வரிசையில் காத்திருந்திருக்கிறேன். ஆனால் அவரே எனக்கு பின்னாளில் பயிற்சியாளரானதை எப்படி மறக்க முடியும். என் ஆரம்ப காலக்கட்டத்தில் கிரகாம் கூச்தான் எனக்கு எல்லாமும். மணிக்கணக்காக என் மட்டைக்கு அவர் பந்துகளை த்ரோ செய்ததைத்தான் மறக்க முடியுமா? நாம் என்னத்தை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறோமோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியவர் கிரகாம் கூச்.
கிரிக்கெட் வீரராக குடும்பத்தை விட்டுப் பிரியும் பயணங்களை இந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டேன் என்னைப் பொறுத்தருளி எனக்கு ஆதரவு காட்டிய என் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றிகள்.
என் 12 வயது முதல் என்னை ஆதரித்த எசெக்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.
இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாழ்த்துக்கள், அதனை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.