நல்ல வேல தப்பிச்சிட்டோம்… இந்த ஒரு விசயம் மட்டும் நடந்திருந்தா நியூசிலாந்து அசால்டா ஜெயிச்சிருப்பாங்க; உண்மையை ஓபனாக பேசிய முகமது ஷமி
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டேரியல் மிட்செல் (134), கேன் வில்லியம்சன் (69) மற்றும் கிளன் பிலிப்ஸ் (41) ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தாலும், முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து வெளியேறியதால் 327 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நியூசிலாந்து அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மிரட்டல் வெற்றி குறித்து பேசிய முகமது ஷமி, ஆடுகளத்தில் பனிப்பொழிவு இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகமது ஷமி பேசுகையில், “நான் எனது வாய்ப்பிற்காக காத்திருந்தேன். நான் பெரிதாக வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடவில்லை. இந்த போட்டிக்காக நான் சில திட்டங்களை வைத்திருந்தேன், எனவே எனது திட்டங்களை சரியாக பயன்படுத்துவதில் மட்டுமே எனது கவனத்தை செலுத்தினேன். புதிய பந்தில் என்னால் முடிந்தவரை அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிவிட வேண்டும் என்று முயற்சித்தேன், அது நடந்துவிட்டது. கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்சை நான் தவறவிட்டது மிகுந்த வேதனையை கொடுத்தது. நியூசிலாந்து அணி வீரர்கள் சற்று அதிரடியாகவும் விளையாடியதால் நான் அதனை எனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களது விக்கெட்டை கைப்பற்றினே. ஆடுகளம் இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்துவீச்சிற்கு சற்று சாதகமாகவே இருந்தது. பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என நாங்கள் நினைத்திருந்தோம், ஆனால் நல் வாய்ப்பாக பனிப்பொழிவு பெரிதாக இல்லை. இது எங்களது பந்துவீச்சிற்கு சாதகமாக அமைந்தது. பனிப்பொழிவு இருந்திருந்தால் எங்கள் வேலை மிக கடினமாக இருந்திருக்கும். நாங்கள் 2015 மற்றும் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்திருந்தோம், ஆனால் இந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம், இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.