நான் பிசிசிஐ தலைவர் பதவிக்கு வந்தது இதற்குத்தான் – கங்குலி அளித்த மாஸ் பதில்!
பிசிசிஐ தலைவர் பதவிக்கு வந்தது இதைச் செய்யதான் என சமீபத்திய பெட்டியில் பேசியுள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி.
இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. அதன்பிறகு, இந்திய கிரிக்கெட்டை சரியான பாதைக்கு எடுத்துச்செல்ல அயராது பாடுபட்டு வருகிறார்.

குறிப்பாக, இளைய தலைமுறை வீரர்களை முறைப்படுத்த ராகுல் டிராவிட் உடன்சேர்ந்து பல திட்டங்களை வகுத்து, அதனை செயல்படுத்தி வருகிறார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் காரணமாக, ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் இறுதியில் இருந்தது தள்ளிப்போனது. மேலும், இரண்டு மாத காலத்திற்க்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. இதனால், பிசிசிஐ-க்கு சுமார் 4000 கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய ஆகஸ்ட் – அக்டோபர் காலங்களில் ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை நடத்திவருகிறார் கங்குலி. அவர் பதவியேற்ற பிறகு தற்போது வரை பிசிசிஐ இதுவரை இல்லாத அளவிற்கு பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ தலைவர் பதவி குறித்தும், வந்ததன் உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் கங்குலி. கங்குலி கூறுகையில்,
“நான் நிர்வாகத்தின் தலைவராக இருப்பதைவிட, வீரர்களுக்கான தலைவராக இருக்கவே விரும்புகிறேன். அவர்களின் முன்னேற்றத்திற்க்காக செயல்படவே விரும்புகிறேன். பிசிசிஐ தலைவர் பதவியை அந்தவகையில் பயன்படுத்தி வருகிறேன். இதன்மூலம் கிரிக்கெட் விளையாட்டு உயர்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல.. அனைவருக்குமானது என உணர செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்” என்றார்.
ஐபிஎல் 2020 குறித்து பேசிய கங்குலி, “ஐ.பி.எல். தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கு உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பி.சி.சி.ஐ. பரிசீலித்து வருகிறது. ஒருவேளை ரசிகர்கள் இல்லாமல் காலி அரங்கில் தான் நடத்த முடியும் என்றாலும் அதுகுறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
ரசிகர்கள், அணி உரிமையாளர்கள், வீரர்கள், நேரடி ஒளிபரப்பு நிறுவனங்கள், ‘ஸ்பான்சர்கள்’ மற்றும் பங்குதாரர்கள் என அனைவரும், இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரை நடத்துவதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.” என தெரிவித்தார்.