மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயம் எனது முழு திறமையை வெளிப்படுத்துவேன் என மனம் திறந்து பேசியுள்ளார் குல்தீப் யாதவ்.
இந்திய அணியில் அஸ்வின் ஜடேஜா சுழற்பந்து ஜோடிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சூழல் ஜோடிகளாக சஹல் – குல்தீப் ஜோடி பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இவ்விருவரும் சரிவர செயல்பட முடியாமல் அணியில் இடம்பிடிக்க திணறிவருகின்றனர்.
அதேநேரம், ஜடேஜா மீண்டும் தனது முழு திறனை வெளிப்படுத்தி 3 விதமான போட்டிகளிலும் ஆடிவருகிறார். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக ஆடிவருவதால் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இவரை எடுத்துவர பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சற்று மோசமாக ஆடியதால் அடுத்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு ஆடிவரும் குல்தீப், ஐபிஎல் போட்டிகளிலும் வெளியில் அமர வைக்கப்பட்டு வந்தார்.
இப்படியொரு சூழலில் மீண்டும் அணியில் இடம்பெறுவது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார் குல்தீப் யாதவ். அவர் கூறுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிவுற்றவுடன் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடனான தொடரில் இடம் பெறவில்லை. இந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தத்தை தந்துள்ளது. எனது முழு திறன் வெளிப்படுத்த நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே என்னை நிரூபித்து காட்ட முடியும்.
இங்கிலாந்தில் இடம்பெறவில்லை என்றாலும், இலங்கை அணியுடனான தொடரில் இடம் கிடைத்தால் நிச்சயம் நிரூபித்து காட்டுவேன். அதற்காக காத்திருக்கிறேன். தற்போது நல்ல பார்மில் இருப்பதாக உணர்கிறேன். அதனை நிரூபிப்பேன்.” என நம்பிக்கையுடன் பேட்டியளித்தார்.
குல்தீப் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேநேரம் 21 டி20 போட்டிகளிலும் 63 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.