ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பது சவாலாக இருந்தது.
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் முதலில் இரட்டை சதம் அடித்தார். 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குவாலியர் மைதானத்தில் அவர் இந்த சாதனையை புரிந்தார்.
அதன்பிறகு 5 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையில் ரோகித் சர்மா உள்ளார். 2013-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூர் மைதானத்தில் 209 ரன்னும், 2014-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி கொல்கத்தா மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன்னும் எடுத்தார்.
அவர் 264 ரன்கள் குவித்ததே ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.
இந்த நிலையில் ஒருநாள் போட்டியில் டிரிபிள் சதம் அடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரோகித்சர்மா உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டியில் டிரிபிள் சதம் அடிப்பது என்பது மிகவும் சவாலானது. டிரிபிள் செஞ்சூரி எடுப்பது எளிதல்ல. ஆனால் நான் அதற்கு கடுமையாக முயற்சி செய்வேன். நான் களம் இறங்கும்போது ரசிகர்கள் 300 ரன்னை குவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS
நான் அடித்த இரட்டை சதத்தில் 209 ரன் இக்கட்டான நேரத்தில் எடுக்கப்பட்டது. தவான் ஆரம்பத்திலேயே ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கோலி ‘ரன்அவுட்’ ஆனார். இதனால் எனக்கு நெருக்கடி இருந்தது. அந்த நேரத்தில் அந்த ரன்னை குவித்தேன்.

Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
எனது 2-வது இரட்டை சதம் (264) மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இந்த போட்டி முடிந்தபிறகு பயிற்சியாளர் டங்கன் பிளட்சன் என்னிடம் 300 ரன்னை உங்களால் எளிதாக அடிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் வீராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோகித்சர்மா பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.