அடுத்த டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தால் அதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வக்கார் யூனிஸ்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு காயத்தினால் பெரிதும் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியில் கிட்டத்தட்ட இடம் இல்லை என்ற நிலைமைக்கு சென்றது. ஆனால் அதிலிருந்து துவண்டு போகாமல் தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொண்டு கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி வாய்ப்பாக களமிறங்கினார்.
புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை கேப்டன்ஷிப் பதவியில் இருந்திராத ஒருவர் எப்படி அணியை வழிநடத்த போகிறார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் விமர்சனங்கள் பெரிதும் நிலவியது. ஆனால் எதிர்பார்ப்பு அனைத்தையும் ஆச்சரியமாக மாற்றி, அணியை அபாரமாக வழிநடத்தி முதல் முறையாக கோப்பையையும் பெற்றுத் தந்திருக்கிறார்.
அதன் பிறகு இந்திய அணியில் நீங்காத இடத்தையும் பிடித்து தொடர்ந்து பங்களிப்பையும் கொடுத்து வருகிறார். மறுக்க முடியாத ஆல் ரவுண்டராக உருவெடுத்திருக்கும் இவரை இந்திய அணியில் அடுத்த டி20 கேப்டன் ஆக நியமித்தாலும் ஆச்சரியம் இல்லை என்று ஹர்திக் பாண்டியா பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ்.
“ஹர்திக் பாண்டியாவை நன்றாக கவனித்தோம் என்றால், ஐபிஎல் அணியை எப்படி வழி நடத்தி கோப்பையை வென்று தந்து இருக்கிறார் என நன்றாக புரிந்து கொள்ளலாம். மேலும் நமக்கு அழுத்தம் நிறைந்த சூழலில் எவ்வாறு கையாள வேண்டும் என்றும் தனது கேப்டன் பொறுப்பு மூலம் சொல்லித் தந்திருக்கிறார். சமீப காலமாக பினிஷிங் ரோலில் அவர் நன்றாக விளையாடி வருவதற்கு முழு முக்கிய காரணம் அவரது கவன சிதறல் இன்மையும் முக்கியமான கட்டத்தில் அமைதியாக ரான் சேர்ப்பதும் தான்.
மேலும் ஆட்டத்தை நன்றாக கணித்து விளையாடுகிறார். இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனாக இவரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” என்றார்.
ஹர்திக் பாண்டியா பற்றி பேசிய மற்றொரு பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறுகையில், “இந்திய அணிக்கு ஒரு ஆற்றலாக திகழ்கிறார். ஆரம்பத்திலும் கடைசியிலும் சொதப்பல் வரும் பொழுது இவர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்பது, இவரது நல்ல மனஉறுதியை குறிக்கிறது.” என்றார்.