ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் அவுட் ஆக்குவதற்கு இதுதான் ஒரே வழி; ஹர்பஜன்சிங் சொன்ன சூப்பர் டிப்ஸ்! 1

ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்வதற்கு கேப்டன் விராட் கோலி இந்த ஒரு முயற்சியை எடுக்க வேண்டும் என ஹர்பஜன்சிங் அறிவுரை கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா சென்று முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி முதல் போட்டியில் 374 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இந்த போட்டியில் உரிய இலக்கை எட்ட முடியாமல் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து இரண்டாவது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 389 ரன்கள் குவித்தது.

மீண்டும் ஒருமுறை இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இம்முறையும் ஏமாற்றமே நேர்ந்தது. ஏனெனில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரையும் இழந்தது.

இந்த இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் சதத்தை கடந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகவும் திணறினார்கள். ஸ்மித் ஆடுவதற்கு கடினமான இடம் எங்கு என்று தெரியாமல் திக்கு முக்காடினர்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் எந்த விஷயத்தில் திணறுவார் என்பது குறித்தும் அவருக்கு யாரை பயன்படுத்தினால் விக்கெட் வீழ்த்துவதற்கு சரியாக இருக்கும் எனவும் சில அறிவுரைகளை கூறி இருக்கிறார் மூத்த சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

“பொதுவாக, ஸ்டீவ் ஸ்மித் வேகப்பந்துவீச்சாளர்களை பந்துவீசினால் நன்கு விளையாட கூடியவர். அதேநேரம் பலமுறை ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி இருக்கிறார். ஆகையால் சஹல் மற்றும் குல்தீப் இருவரையும் அடுத்தடுத்து பந்துவீசச் செய்து ஸ்மித்தை ரன் அடிக்கவிடாமல் திணறடித்தால், எளிதில் விக்கெட் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு முனையில் வேகப்பந்துவீச்சாளர் மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் என பயன்படுத்தியதால் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என நான் நினைக்கிறேன். அடுத்த போட்டியில் விராத் கோலி இதை செய்யும் பட்சத்தில் அவரை விக்கெட் வீழ்த்த முடியும்.” என அறிவுறுத்தினார்.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற டிசம்பர் இரண்டாம் தேதி கான்பரா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டதால் இந்த போட்டியில் பெயர் அளவிலேயே இருக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *