வாய்ப்பு கிடைத்தால் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கானுடன் இணைந்து பந்து வீச வேண்டும் என்று ரவி பிஷ்னாய் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த இந்திய அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய், தான் பங்கேற்ற போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிர்கால இந்தியா அணியின் நட்சத்திர வீரராக வலம் வருவதற்கு அனைத்து தகுதியையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிக மோசமாக செயல்பட்ட நிலையிலும் இளம் வீரராக இருந்து இவர் பந்து வீசிய விதம் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது.
இருந்த போதும் அணியின் காம்பினேஷன் கருதி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருடைய பெயர் இடம் பெறவில்லை, ஆனால் யாராவது ஒரு வீரருக்கு அடிபடும் பட்சத்தில் ரவி பிஷ்னாய் நல்ல தேர்வாக இருப்பார் என்று இந்திய அணி தேர்வாளர்கள் இவரை ஸ்டாண்ட்-பை வீரராக வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில், தான் கடந்து வந்த பாதை குறித்தும் தன்னுடைய எதிர்பார்ப்பு குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிக தகவல்களை தெரியப்படுத்தி வரும் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானுடன் இணைந்து பந்து வீசி அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி பிஷ்னாய் தெரிவித்ததாவது, “இந்திய அணியில் விளையாடிய போது இந்திய அணியின் அனுபவமாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலுடன் விளையாடியது மிகவும் நகைச்சுவையாக இருந்தது,சஹால் சமகால சிறந்த ஸ்பின்னர்களின் முதல் ஐந்து இடத்தில் பிடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் நான் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்-பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் இணைந்து பந்து வீசுவதை விரும்புகிறேன், நிச்சயம் அவரிடமிருந்து பார்ட்னர்ஷிப் சமயத்தில் எப்படி சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை கற்றுக் கொள்வேன்” என்று பிஷ்னாய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.