டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னேறினார் கே.எல் ராகுல்
ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடரில் மாஸ் காட்டியதன் மூலம் இந்திய வீரர் கே.எல் ராகுல் சர்வதேச டி.20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடர் மற்றும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் ஐசிசி புதிய டி20 தரவரிசை பட்டியை இன்று வெளியிட்டது.
இதில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 163 ரன்கள் விளாசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் ஹச்ரதுல்லா சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் 31 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளார்.
இதே போல் ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுலும், இந்திய அணியை திணறடித்த ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல்லும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இதே போல் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டி ஆர்கி ஷார்ட் 8 இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20யில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு ஆட்டநாயகன் விருது பெற்ற கவுட்டர் நைல் சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 45வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியில் கே.எல்.ராகுல் 4 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 2 இடங்கள் முன்னேறி 17வது இடத்தையும், முன்னாள் கேப்டன் தோனி 7 இடங்களில் முன்னேறி 56வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய வீரர் ஜாஸ்பிரிட் பூம்ரா 12 இடங்களில் முன்னேறி 15வது இடத்தையும், ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா 18 இடங்கள் முன்னேறி 43வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதே போல் அயர்லாந்து அணியின் கெவின் ஓ பிரைன் பேட்டிங் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 61வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சில் பீட்டர் சேஸ் 22 இடங்கள் முன்னேறி 99வது இடத்தை பிடித்துள்ளார்.