தனிப்பட்ட சாதனைகளின் மேல் கவனம் செலுத்தாமல் அணியின் வெற்றியின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று விராட் கோலிக்கு கௌதம் காம்பீர் அறிவுரை கொடுத்துள்ளார்.
டி20 தொடரின் உலகச் சாம்பியனை தீர்மானிக்கும் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது.ஒவ்வொரு அணியும் மைதானத்தை புரிந்து அதற்கு ஏற்றார் போல் விளையாட வேண்டும் என்பதற்காக பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு விளையாடி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தன்னுடைய முதல் பயிற்சி போட்டியை விளையாடிய இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு 6 வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே மிகச் சிறப்பாக கையாண்ட இந்திய அணி, நிச்சயம் இந்த உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து தனக்கு விருப்பமான அணிக்கும், தனது அணி வீரர்களுக்கும் தேவையான அறிவுரைகளையும் யோசனைகளையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி குறித்தும், இந்திய வீரர்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து காம்பீர் பேசுகையில்,“இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கான ரண்களை அடிக்க வேண்டும், அவர் தன்னுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடக்கூடாது” என்று விராட் கோலிக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.