ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் வெற்றிகரமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று அவருடன் சில ஆண்டுகள் பயணித்த பார்திவ் பட்டேல் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்திய அணி சமீப காலமாக அடுத்தடுத்த டி20 தொடர்களை வென்று வரலாறு படைத்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா இரண்டு அணிகளுக்கு எதிரான டி20 தொடரையும் வென்று தொடர்ச்சியாக 11 டி20 தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பும் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரை அடுத்து மிகப்பெரிய தொடருக்கு இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்தி செல்கிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனெனில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை.
2015 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஆஸ்திரேலியா மைதானத்தில் விளையாடி இருக்கின்றனர். ஆகையால் அனுபவமிக்க அவர்களுக்கு ஆஸ்திரேலியா மைதானம் நன்கு பழக்கப்பட்டதாக இருக்கும். இந்த அனுபவத்தின் மூலம் இளம் வீரர்களை நன்றாக வழி நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுடன் 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பயணித்த பார்த்திவ் பட்டேல், ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் எப்படி இவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கிறார்.
“ரோகித் சர்மாவிடம் ஒரு சிறந்த பழக்கம் இருக்கிறது. நன்றாக விளையாடும் வீரர்களை அவர் பெரிதாக சட்டை செய்யமாட்டார். ஆனால் பார்மில் இல்லாத வீரர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். அணி வெற்றி பெற அந்த குறிப்பிட்ட வீரர்களிடமிருந்து என்ன தேவை, மேலும் ஃபார்மில் இல்லாத போது அவரை ஒதுக்கிவிடாமல் அணி நிர்வாகம் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறது என பேசிக்கொண்டு இருப்பார்.
நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் பொழுது 2016 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பான தொடராக அமையவில்லை. அப்போது நீண்ட நேரம் என்னிடம் அவர் பேசிக் கொண்டே இருப்பார். நேர்மறையாக பேசி தொடர்ந்து நம்பிக்கை கொடுத்து வந்தார். எந்த ஒரு சூழலிலும் சரியாக விளையாடவில்லை என்றாலும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார். இந்த பழக்கம் குறிப்பிட்ட வீரருக்கு மிகுந்த நம்பிக்கையை தரும். அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக செயல்பட வேண்டும் என்று உந்துதலையும் தரும். இப்படி ஒரு பழக்கத்தின் மூலமாகத்தான் ரோகித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக இருந்து வருகிறார் என நான் கருதுகிறேன்.” என்றார்.