சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த அணியாக அணியாக உள்ளது முகமது ரிஸ்வான் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் இதுவரை ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்கவில்லை, ஆனால் முகமது ரிஸ்வானோ ஒவ்வொரு போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து வருகிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முகமது ரிஸ்வான் முதலிடத்தை பிடித்துள்ளார். பாபர் அசாம் 1155 நாட்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார், தற்போது பாகிஸ்தான் அணியின் மற்றொரு முக்கிய வீரரான முகமது ரிஸ்வானே பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். மிஸ்பாஹ் உல் ஹக், பாபர் அசாம் ஆகியோருக்கு அடுத்தபடியாக டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் மூன்றாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் முகமது ரிஸ்வான் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியின் மார்க்ரம் உள்ளார், நான்காவது இடத்தில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் உள்ளார். சூர்யகுமார் யாதவை தவிர மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.
பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில் வுட் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா வீரர் ஷம்சி 2-வது இடத்தில் நீடிக்கிறார்.இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 3வது இடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபியே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 2வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் மொய்ன் அலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் உள்ளார், மற்ற இந்திய ஆல் ரவுண்டர்கள் யாரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை.